இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) அல்லது சட்ட தினம் (Law Day) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக அனுசரிக்கப்படுவதாகவும். மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கர் என்பவரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் உள்ள இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் துவக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
வரலாறு
தெற்கு ஆசியா நாடான இந்தியாவின் பெரும்பகுதி 1858 லிருந்து 1947 வரையில் ஆங்கிலேயர்கள் காலனித்துவ ஆட்சிக்கு கீழ் இருந்துள்ளது.[5] இக்காலகட்டத்தில், ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலைப்பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக முயன்று வெற்றியை ஈட்டியது. 1934 ஆம் ஆண்டுவாக்கில் இந்திய நாட்டிற்கு அரசியல் நிர்ணயசபை அமைக்க ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பிறகு 1936 இலும், மற்றும் 1939-லும் இருமுறை இக்கோரிக்கையை பற்றி வலியுறத்தப்பட்டன. அதன்படி 1942 ஆம் ஆண்டு மார்ச் இல் கிரிப்ஸ் தூதுக்குழு அரசியல் நிர்ணய சபையை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்பின்பு 1946 மே இல் அரசியல் நிர்ணய சபை ஏற்பத்த பரிந்துரைக்கப்பட்டு, 1946 சூலையில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றது 1946 திசம்பர் 11 இல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு அச்சபையின் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.
1947 ஆகத்து 15 க்கு (விடுதலைக்கு) பின்பு, பிரித்தானியாவின் இந்தியா, இந்திய மாகாணம், பாக்கித்தான் மாகாணம் என இருவேறு பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச்சாசனத்தை, உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணயசபை குழு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
தேசிய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் (சம்விதான் திவாஸ்) ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்:
இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவ.26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன சட்ட தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அரசியல் சாசனத்தை உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் தேவைப்பட்டன. சாசனத்தின் இறுதி வடிவம், 395 ஷரத்துகள், 8 அட்டவணைகளைக் கொண்டுள்ளது.
பிரிட்டன், அயர்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட 10 நாடுகளிடம் இருந்து சில அம்சங்கள் இந்திய அரசியல் சாசனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்பு சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் இருந்தார். இவரே இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
இந்திய அரசியலமைப்பு சாசனம் கையால் எழுதப்பட்ட ஆவணமாகும். இது உலகிலேயே கையால் எழுதப்பட்ட, மிக நீண்ட ஆவணங்களில் ஒன்றாகும். இதன் ஆங்கில வடிவத்தில் மொத்தம் 1,17,369 வார்த்தைகள் உள்ளன.
கையால் எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆவணப் பிரதி, ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டு, நாடாளுமன்ற வளாகத்தின் நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
அசல் கையெழுத்து ஆவணத்தில் 283 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு இந்திய அரசு சட்டம் 1935-ஐக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பின் முன்னுரை இதுவரை ஒரே ஒரு முறை (1976 டிசம்பர் 18 அன்று அவசர நிலையின்போது) மட்டுமே திருத்தப்பட்டுள்ளது.